கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் தேனில் வி‌ஷமாத்திரை கலந்து கொடுத்து அக்காள் மகளை கொன்று, ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால், தேனில் வி‌ஷமாத்திரை கலந்து கொடுத்து அக்காள் மகளை கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-01-09 23:00 GMT

கோவை,

கோவை நீலிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் மணி (வயது 63). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி இறந்து விட்டார். ஒரு மகன், மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் மணி, நீலிகோணம்பாளையத்தில் உள்ள தனது அக்காள் பாக்கியம்(68) என்பவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பாக்கியத்தின் மகள் சாந்தியும் அந்த வீட்டில் தங்கி இருந்தார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மணி, பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி கொடுக்க முடிய வில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

இதனால் மணி தனது அக்காள் பாக்கியத்திடம் ரூ.4½ லட்சம் கடன் வாங்கி தனது கடனை அடைத்தார். அதன்பிறகு பல மாதங்களாகியும் அக்காளிடம் வாங்கிய பணத்தை அவரால் திருப்பி கொடுக்க வில்லை. இதனால் அவர் மணியிடம் அடிக்கடி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஏற்கனவே பணநெருக்கடியில் தவித்த மணிக்கு பணத்தை திருப்பி கொடுக்க வழிதெரியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் பாக்கியம், சாந்தி ஆகியோர் கால் வலிக்கு மாத்திரை வாங்கி வருமாறு மணியிடம் கூறி உள்ளனர். அப்போது அடிக்கடி பணத்தை திருப்பி கேட்கும் தனது அக்காளையும், அவருடைய மகளையும் கொலை செய்து விட வேண்டும் என்ற விபரீத எண்ணம் தோன்றியது. அதன்படி மணி, வி‌ஷ மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அதை தேனில் கலந்து மிக்சியில் போட்டு அரைத்துள்ளார். பின்னர் அந்த வி‌ஷத்தை, கால்வலி மருந்து என கூறி பாக்கியம் மற்றும் சாந்திக்கு கொடுத்துள்ளார். அவர்களும் கால்வலி மருந்து தான் என்று நம்பி வி‌ஷம் கலந்த மருந்தை வாங்கி குடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மணியும் வி‌ஷத்தை குடித்துள்ளார்.

அதன்பிறகு சிறிதுநேரத்தில் மணி, சாந்தி ஆகியோர் மயங்கி விழுந்தனர். பாக்கியம் வாந்தி எடுத்து உயிருக்கு போராடினார். உடனே அவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ரஞ்சித் என்பவருக்கு போன் செய்து வரவழைத்தார். அவர் வந்து பார்த்த போது வீட்டுக்குள் 3 பேரும் மயங்கிக் கிடந்தனர். அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மணியும், சாந்தியும் பரிதாபமாக இறந்தனர். பாக்கியம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட அக்காள், அவருடைய மகளுக்கு தேனில் வி‌ஷம் கலந்து கொடுத்து விட்டு ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்