வார்டு மறுவரையறை பட்டியலை மாற்றகோரி எரியோடு பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

வேடசந்தூர் அருகே எரியோடு பேரூராட்சியில் வெளியிடப்பட்ட வார்டு மறுவரையறை பட்டியலில் பண்ணைப்பட்டியில் உள்ள வார்டுகளில் மாற்றம் செய்யப்படாமல் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

Update: 2018-01-09 22:15 GMT

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே எரியோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பண்ணைப்பட்டியில் 200 வீடுகள் உள்ளன. இதில் பேரூராட்சியில் வெளியிடப்பட்ட வார்டு மறுவரையறை பட்டியலில் பண்ணைப்பட்டியில் உள்ள வார்டுகளில் மாற்றம் செய்யப்படாமல் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

 இந்த நிலையில் நேற்று, வார்டு முன்னாள் உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த செயல்அலுவலர் ராஜசேகரனுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கி சுமார் 7 மணி நேரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜேந்திரன், வேடசந்தூர் தாசில்தார் தசாவதாரன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்