அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6–வது நாளாக வேலைநிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2018-01-09 21:00 GMT
கோவில்பட்டி,

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 6–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கோவில்பட்டி

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் 6–வது நாளாக நேற்றும் நீடித்தது. எனவே தற்காலிக பணியாளர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மூலம் அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர். நேற்று கோவில்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 68 பஸ்களில் 17 டவுன் பஸ்கள் உள்பட 51 பஸ்கள் இயக்கப்பட்டன. 12 பஸ்களில் அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியாற்றினர். மற்ற பஸ்களில் தற்காலிக ஊழியர்கள் பணியாற்றினர்.

பொதுமக்கள் அவதி

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் மும்முரமாக இயங்கின. அவற்றில் காலை, மாலை வேளைகளில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கோவில்பட்டியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்து பஸ்களில் பயணம் செய்தனர். சில கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால், அந்த பகுதி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 55 பஸ்களில் 49 பஸ்கள் இயக்கப்பட்டன. தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளை தவிர பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு திரும்பி வந்து பஸ்களை இயக்கினர். ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 34 பஸ்களில் 22 பஸ்கள் இயக்கப்பட்டன.

விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 38 பஸ்களில் 26 பஸ்கள் இயக்கப்பட்டன. சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 6 பஸ்களும் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்