ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை: 4 பேர் கோர்ட்டுகளில் சரண்

ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் பல்வேறு கோர்ட்டுகளில் நேற்று சரண் அடைந்தனர்.

Update: 2018-01-09 20:30 GMT

நெல்லை,

ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் பல்வேறு கோர்ட்டுகளில் நேற்று சரண் அடைந்தனர்.

கொலை வழக்கு

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்கிற மோட்டார் முருகன் (வயது 45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 5–ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை இலந்தைகுளம் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது ஒரு கும்பல் முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த சூரிய தினேஷ் (22), இலந்தைகுளத்தை சேர்ந்த சிவபெருமாள் (24) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

4 பேர் சரண்

மேலும் இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட 4 பேர் நேற்று கோவை மற்றும் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர்.

பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (24), பாலசுப்பிரமணியன் (23), இலந்தைகுளத்தை சேர்ந்த சபரி (22) ஆகிய 3 பேரும் கோவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைத்து, நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதேபோல் நெல்லை கங்கைகொண்டானை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (23) தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைத்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்