வீடுகளில் தோட்டம் அமைக்க மானிய விலையில் விதைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
நெல்லை மாவட்டத்தில் வீடுகளில் தோட்டம் அமைக்க மானிய விலையில் விதைகள் வழங்கப்படுகிறது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் வீடுகளில் தோட்டம் அமைக்க மானிய விலையில் விதைகள் வழங்கப்படுகிறது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
காய்கறி விதைகள் பாக்கெட்டுகள்தமிழகத்தில் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஊட்டச்சத்துக்கள் உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்திட கிராம மற்றும் புறநகர் வீட்டு தோட்டங்களில் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கான ஒரு சிறப்பு முன்னோடி முயற்சியாக வீட்டு தோட்டு காய்கறி பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
உயர் விளைச்சல் தரும் கத்தரி, தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கன்காய், கீரை வகைகள், மிளகாய் மற்றும் கொத்தவரை ஆகிய காய்கறிகளில் ஏதேனும் 5 காய்கறி விதைகள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூ.20 ஆகும். 6 லட்சத்து 25 ஆயிரம் காய்கறி விதை பாக்கெட்டுகள் அனைத்து மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் 40 சதவீதம் மானிய விலையில் விதை பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ.8 மானியம்ரூ.20 மதிப்புடைய ஒரு காய்கறி விதை பாக்கெட்டுக்கு அரசு மானியமான ரூ.8 வழங்குகிறது. பயனாளிகள் ரூ.12 செலுத்தி விதை பாக்கெட்டை பெற்று கொள்ளலாம். இதற்கான நடப்பு நிதி ஆண்டில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு பயனாளியும் அதிக பட்சமாக 6 காய்கறி பாக்கெட்டுகள் வரை பெற்று கொள்ளலாம். தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 667 பேர் பயன்பெறுவார்கள்.
இந்த பாக்கெட்டுகள் நெல்லை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 500 வீட்டு காய்கறி விதைகள் வழங்கப்பட உள்ளது. கிராமங்கள் மற்றும் புறநகர்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலம் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.