களக்காட்டில் பொங்கலை முன்னிட்டு மண் பானைகள் உற்பத்தி தீவிரம்
களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.
களக்காடு,
களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.
மண்பானை தயாரிப்பு பணி மும்முரம்நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளத்தில் 10 குடும்பத்தினர் மண் பாண்ட தொழிலை தலைமுறை, தலைமுறையாக செய்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகைக்காக சிறிய பானைகள் முதல் பெரிய பானைகள் வரை பல்வேறு விதங்களில் தயார் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பொங்கலிடுவதற்கு மண் அடுப்பு, பானை மூடி உள்ளிட்ட பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் பானைகள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. வியாபாரிகள் மொத்தம், மொத்தமாக இங்கு வந்து பானைகள் கொள்முதல் செய்கின்றனர்.
ரூ.20 முதல் ரூ.300 வரை பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மண் பானைகள் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் அதற்கு தேவையான மண் கிடைக்காமல் தொழிலாளர்கள் தவிப்பு அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் நடராஜன், ஆறுமுக வேளார், லட்சுமி கூறியதாவது:–
அதிக செலவுகுளங்களில் மண் எடுப்பதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் எங்களுக்கு தேவையான மண்ணை கொண்டு வர முடியவில்லை. அப்படியே அனுமதி கிடைத்தாலும், சைக்கிள்களில் மட்டுமே கொண்டு வர வேண்டியதுள்ளது.
உள்ளூரில் மண் எடுக்க முடியாததால், தோவாளை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து மண் எடுத்து வருவதற்கு அதிக செலவு செய்ய வேண்டியதுள்ளது.
இழப்பீடு வழங்க வேண்டும்மண்ணுக்கு செலவளிக்கும் தொகை பானை விற்பனை செய்யும் போது கிடைப்பதில்லை என்பதால் நஷ்டமே ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களில் மண் பாண்டம் தயாரிக்கும் தொழில் முடங்கி விடுவதால் அதனை நம்பியுள்ள நாங்கள் பிழைப்புக்கு வழியின்றி பாதிப்பு அடைகிறோம். எனவே அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.