திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 311 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
திருவள்ளூர்,
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழக அரசு சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அரிசி பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 311 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படஉள்ளது.
இதற்காக திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரூ.234.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 500 கிலோ முந்திரி, 10 ஆயிரத்து 500 கிலோ உலர் திராட்சை, 2 ஆயிரத்து 600 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டு பொட்டலங்கள் இட்டு அனைத்து நியாயவிலை கடைகள் மூலம் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் 2 லட்சம் கரும்புகள் கடலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. நியாய விலைக்கடைகளில் குடும்பஅட்டைதாரர்கள் கூட்டநெரிசலை தவிர்க்கும் பொருட்டு 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் இணைக்கப்பட்ட நியாய விலைக்கடைகளில் சுழற்சி முறையில் பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சுழற்சி முறைகள் குறித்து விபரத்தினை குடும்பஅட்டைதாரர்கள் அறிந்து கொள்ளும் விதமாக நியாய விலைக்கடைகளில் விளம்பரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.