அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சாலைமறியல் 830 பேர் கைது

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலைமறியலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 830 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-08 22:45 GMT

சேலம்,

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. வேலைநிறுத்த போராட்டம் நேற்று 5–வது நாளாக நீடித்தது. சேலம் மண்டலம், தர்மபுரி மண்டலங்களில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 2,500 டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு விளக்கம் கேட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பாண்டி நோட்டீசு அனுப்பி உள்ளார். ஆனாலும் நேற்று தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் அருகில், போக்குவரத்து தொழிற்சங்கத்தில் இடம் பெற்றுள்ள சி.ஐ.டி.யு., ஏ.ஐ.சி.டி.யு, தொ.மு.ச., பாட்டாளி தொழிற்சங்கம், தே.மு.தி.க. தொழிற்சங்கம் உள்ளிட்ட 24 மத்திய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து தொழிற்சங்கத்தினர் சேலம் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். இதனால், போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தடையை மீறி கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகில் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மறியல் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தொ.மு.ச. தலைவர் பழனியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சேலம் மண்டல (சி.ஐ.டி.யு.) பொதுச்செயலாளர் செல்வகுமார், தொ.மு.ச. பொதுச்செயலாளர் மணி, பாட்டாளி தொழிற்சங்க பொதுசெயலாளர் ராஜேந்திரன், டி.டி.எஸ்.எப். பணியாளர் சங்க துணைத்தலைவர் மாரியப்பன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளான கண்ணன், தமிழ்ச்செல்வன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்கள் ஓய்வுபெற்ற ஒரு மாதத்திற்குள் பணிக்கொடை வழங்காத அதிகாரிகளை கைது செய், ஓட்டை உடைசல் பஸ்களை மாற்று என்பன உள்ளிட்ட கோ‌ஷங்களை மறியலில் ஈடுபட்டவர்கள் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 830 பேரை சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தின்போது போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தின் சி.ஐ.டி.யு. சேலம் மண்டல பொதுச்செயலாளர் செல்வகுமார் கூறியதாவது:–

சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் சேலம் மற்றும் தர்மபுரி மண்டலத்தில் 13 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டுமே தற்போது பணிக்கு சென்று, பணிமனையில் இருந்து ஒவ்வொரு பஸ்சாக பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதும், பின்னர் அங்கிருந்து பஸ் வெளியூருக்கு இயக்கப்பட்டதுபோல ‘இன்வாய்ஸ்’ போலியாக காண்பித்து மீண்டும் பணிமனைக்கு பஸ்சை கொண்டுவிடும் பணியில்தான் ஈடுபட்டு வருகிறார்கள்.

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லாரி, டெம்போ, டிப்பர் லாரி டிரைவர்களை தற்காலிக அரசு பஸ் டிரைவர்களாக நியமித்து பஸ்களை இயக்க செய்து வருகிறார்கள். அரசு பஸ்களில் 60 சதவீத பஸ்கள் காலாவதியான, தகர டப்பா பஸ்கள். அதை அனுபவம் வாய்ந்த டிரைவர்களால் மட்டுமே இயக்கமுடியும். தற்காலிக டிரைவர்கள் இயக்கினால் பயணிகள் உயிரை பணயம் வைத்துதான் செல்ல வேண்டும். ஒவ்வொரு பஸ்சும் நிர்ணயித்த அளவை விட 10 லட்சம் கிலோ மீட்டர் ஓடிவிட்டன.

தமிழக முதல்–அமைச்சரின் சொந்த மாவட்டம் சேலம் என்பதால், வெளி ஆட்களை அதிகமாக அழைத்து வந்து வீம்புக்காக பஸ்களை இயக்கி வருகிறார்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை. இதனால், சேலம் மண்டலத்தில் 30 முதல் 40 சதவீத பஸ்கள்தான் இயங்குகிறது. 60 சதவீத பஸ்கள் ஓடவில்லை.

சேலம் மண்டலத்தில் முழுமையாக பஸ்கள் இயக்கப்பட்டால் தினமும் ரூ.2 கோடி வரை வசூல் ஆகும். ஆனால், தற்போது ரூ.30 லட்சம் மட்டுமே வசூலாகி வருகிறது. தர்மபுரி மண்டலத்தில் தினமும் ரூ.1 கோடி வசூலுக்கு பதிலாக ரூ.16 லட்சம் மட்டுமே வசூலாகி உள்ளது. எவ்வளவு வசூல் என்பதை நிர்வாக அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். எனவே, கோரிக்கை நிறைவேறும் வரை தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்