நெல்லை மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் ஓடின: போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது

நெல்லை மாவட்டத்தில் நேற்று 50 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடின. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 495 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-08 23:00 GMT
நெல்லை,

சம்பள உயர்வு தொடர்பாக தமிழக அரசுடன் உடன்பாடு ஏற்படாததால், 13 போக்குவரத்து சங்கங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 11 பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 40 முதல் 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன.

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், நெல்லை புதிய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. மேலும் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி பணிக்கு திரும்புமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறை முடிந்து, நேற்று வேலை நாள் என்பதால் அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் பஸ்களை எதிர்பார்த்து பஸ்நிலையங்களில் காத்திருந்தனர். ஆனால் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். கிடைத்த பஸ்களில் போட்டி போட்டு ஏறி கடும் நெருக்கடியில் பயணம் செய்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி பஸ்கள் மற்றும் வேன்களை இயக்கினர். பயணிகள் அந்த வாகனங்களில் ஏறி செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்றனர்.

இதற்கிடையே பணிமனைகளில் நேற்று காலை தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தகுதி வாய்ந்த டிரைவர், கண்டக்டர்கள் உடனடியாக பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பஸ்சில் போதுமான டீசல் உள்ளதா? பஸ் இயக்குவதற்கு தகுதியான நிலையில் உள்ளதா? என்பதை பார்க்காமல் உடனடியாக பஸ் இயக்கப்பட்டது.

இவ்வாறு இயக்கப்பட்ட ஒரு பஸ் நேற்று நடுவழியில் நின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ் நேற்று காலை டீசல் இல்லாததால் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி நடந்தே பஸ் நிலையத்துக்கு சென்றனர். போதிய பஸ்கள் இயக்கப்படாததால் ஏராளமானவர்கள் ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அரசு பஸ்கள், தனியார் பஸ்களில் அறிவிக்கப்படாத கட்டண உயர்வாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தனியார் வாகனங்களில் நெல்லையில் இருந்து ஆலங்குளத்துக்கு ரூ.50-ம், தென்காசிக்கு ரூ.100-ம் வசூலிக்கப்பட்டது. வேறு வழியின்றி அந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர். ஒருசில அரசு பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நெல்லை சந்திப்பில் இருந்து ஸ்ரீபுரம், டவுன் பகுதிகளுக்கு சென்ற அரசு மற்றும் டவுன் பஸ்களில் வழக்கமாக முறையே ரூ.3 மற்றும் ரூ.4 கட்டணம் ஆகும். இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி நெல்லை சந்திப்பில் இருந்து டவுனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் ஆங்காங்கே பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று காலை அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்டபடி சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., பா.ஜனதா தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கையில் இருந்த சிறிய ஒலிபெருக்கி மூலம் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் இவர்களது போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதில் மொத்தம் 495 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை நெல்லை மதுரை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று 5-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் 63 சதவீத அரசு பஸ்கள் இயங்கின. இதில் பெரும்பாலான அரசு பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்ட போதிலும், அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று மாலையில், வேலை முடிந்து வீட்டுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்து, பின்னர் தங்கள் ஊர்களுக்கு பஸ்களில் சென்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 

மேலும் செய்திகள்