பள்ளி வளாகத்தில் டெங்கு கொசு கண்டுபிடிப்பு: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

தருவைகுளம் அரசு பள்ளிக்கூட வளாகத்தில் இருந்த டிரம்களில் டெங்கு கொசு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.;

Update: 2018-01-08 23:00 GMT
ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின் படி அப்பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று காலையில் தருவைகுளம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் ஆணையாளர் முத்துகுமார், டெங்கு கொசு ஒழிப்பு பணி மண்டல அலுவலர் அமலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அந்த பள்ளியில் நடந்து வரும் கட்டுமான பணிக்காக டிரம்களில் பிடித்து வைக்கப்பட்ட தண்ணீரிலும் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ரூ.2 ஆயிரமும், கட்டுமான ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்தனர். அதன்பின்னர் அந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து புதியம்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள், வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டியில் குளோரின் அளவு மற்றும் கொசு புழு இருக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது புதியம்புத்தூர்- ஓட்டப்பிடாரம் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் குடிநீர் தொட்டியில் டெங்கு கொசு உற்பத்தியாவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பள்ளிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதன் பின்னர், அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்