நின்ற லாரி மீது கார் மோதல்; தேங்காய் வியாபாரி பலி கல்லூரி மாணவர் படுகாயம்

வல்லநாடு அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தார். கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-01-08 23:00 GMT
ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே நரையன்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஐகோர்ட் துரை. இவருடைய மகன் சவுந்தர்பழம் (வயது 36). இவர் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கரும்பு வியாபாரம் செய்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கரும்பு வியாபாரம் செய்வதற்காக, சவுந்தர்பழம் நேற்று காலையில் தேனியில் சென்று கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்வதற்கு முன்பணம் செலுத்தினார். பின்னர், அவர் அங்கிருந்து தனது காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் நவீனும் (19) காரில் வந்தார்.

வல்லநாடு அருகே நாணல்காடு விலக்கில் வந்தபோது, அங்கு பழுதாகி சாலையோரம் நின்ற லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் சவுந்தர்பழம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நவீன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த நவீனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த சவுந்தர்பழத்தின் உடலை பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த நவீனுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குண்டல் ஆகும். இவருடைய தந்தை முருகேசன் கோவையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், நரையன்குடியிருப்பில் உள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து, கொம்மடிக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும் செய்திகள்