மேட்டூர் அணை நீர்மட்டம் 56 அடியாக குறைந்தது: நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரம் வெளியே தெரிகின்றன
மேட்டூர் அணை நீர்மட்டம் 56 அடியாக குறைந்ததால், அதன் நீர்த்தேக்கப்பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கி இருந்த நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரம் ஆகியவை நன்றாக வெளியே தெரிகின்றன.
மேட்டூர்,
மேட்டூரில் கடந்த 1925-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணையை கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. அதற்கு முன்பாக அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் இருந்த சேத்துக்குளி, பண்ணவாடி, கோட்டையூர், காவேரிபுரம், சாம்பள்ளி உள்பட 13-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணை கடந்த 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி திறக்கப்பட்டது. அப்போது சேத்துக்குளியில் இருந்த கிறிஸ்தவ கோபுரம், பண்ணவாடியில் இருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் கோவில், கோட்டையூரில் இருந்த ராஜா கோட்டை ஆகிய வழிபாட்டுத்தலங்கள் தண்ணீரில் மூழ்கின.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாக குறையும்போது கிறிஸ்தவ கோபுரமும், நீர்மட்டம் 68 அடியாக குறையும்போது ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையும் வெளியே தெரிவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் இந்த புராதன நினைவுச்சின்னங்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தன.
இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், அணைக்கு நீர்வரத்து போதிய அளவில் இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ணவாடி பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருந்த இந்த புராதன சின்னங்கள் வெளியே தெரியத்தொடங்கின.
நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.47 அடியாக குறைந்தது. இதனால் சேத்துக்குளி மற்றும் பண்ணவாடி நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ கோபுரம் அதன் சாளரம் வரையும், நந்தி சிலை அதன் பீடம் வரையும் நன்றாக வெளியே தெரிகின்றன. மேலும், நந்தி சிலையின் பின்புறம் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் முகப்பும் தற்போது வெளியே தெரிகிறது.
இந்த புராதன நினைவுச்சின்னங்களை பார்வையிட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பரிசல்துறைக்கு வந்தவண்ணம் உள்ளனர். மேலும், அணை கட்டப்பட்டபோது நீர்த்தேக்கப்பகுதிகளில் இருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த கிராமமக்களும் இங்கு வந்து தங்கள் வழிபாட்டுத்தலங்களை பார்வையிட்டு வணங்கி செல்கின்றனர். இதன் காரணமாக பண்ணவாடி பகுதி தற்போது சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 162 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.