கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டம்

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-08 22:45 GMT
பெரம்பலூர்,

ஆன்லைன் மூலம் சான்றிதழ் மற்றும் பட்டா மாறுதலுக்கான பரிந்துரை செய்வதற்கான செலவின தொகை வழங்கப்படாததை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வராததால் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இரவு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தை தொடங்கினர். அப்போது செலவின தொகையை வழங்குவது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பெரம்பலூர் வட்டத்தலைவர் அருண்பிரசாத் தலைமை தாங்கினார். இதில் 4 பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 17 பேர் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் கொட்டும் பனியை பொருட் படுத்தாமல் சாமியானா பந்தல் அமைத்து அங்கேயே போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கு பாதுகாப்புக்காக போலீசார் அங்கு இருந்தனர்.

வேப்பந்தட்டை, ஆலத்தூர்

வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமையில், இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் ஆலத்தூர், குன்னம் தாலுகா அலுவலகங்களிலும் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.

அரியலூர், ஆண்டிமடம்

இதேபோல் அரியலூர் மாவட்ட தாலுகா அலுவலக வாயில் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு வட்டார தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். செயலர் பழனிவேல், நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்