போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி- தொழிற்சங்கத்தினர்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி-தொழிற்சங்கத்தினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அரசு பஸ் டிரைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-08 23:00 GMT
நாகப்பட்டினம்,

தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசு தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து பஸ்களை இயக்கி வருகிறது. இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேற்று நாகை புதிய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி தலைமையில், கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாகை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவபிரகாசம், அமுதாராணி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாகை நகர செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் பகு, ஜெயபால், ஜெயராமன், வேணு உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 30 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அரசு பஸ் டிரைவர் மயக்கம்

அதேபோல், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு., தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சீனிமணி தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்வதற்காக திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுத்ததால் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருக்குவளை தாலுகா மீனம்பநல்லூர் பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஆரோக்கியதாஸ் (வயது50) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டுஅருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 270 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது அங்கு சரியாக உணவு வழங்கவில்லை என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்