வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடிப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. இதையொட்டி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-08 23:00 GMT
நாமக்கல்,

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 4-ந் தேதி இரவு முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இவர்களின் போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது.

இருப்பினும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்களை பணியில் அமர்த்தி பெரும்பாலான அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகளுக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படவில்லை.

இதற்கிடையே நேற்று காலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய நாமக்கல் பூங்கா சாலையில் திரண்டனர். ஆனால் போலீசார் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் கோர்ட்டு முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று மாலையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனவே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், துணை தலைவர் தம்பிராஜா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் சிங்காரம், முருகேசன் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் வேனில் ஏற்றி திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்