லாரி டிரைவரை சுத்தியலால் அடித்து கொன்ற சிறுவன் கைது

நவிமும்பையில், தன்னை அடித்த லாரி டிரைவரை 14 வயது சிறுவன் சுத்தியலால் அடித்து கொன்றான். அவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-08 22:30 GMT

மும்பை,

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் குலாப்சந்த்(வயது22). நவிமும்பையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், உரண் தாலுகாவில் உள்ள ஜசாய் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

இவருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்பட்டறையில் உதவியாளராக வேலை பார்த்து வரும் 14 வயது சிறுவன் தங்கியிருந்தான்.

சம்பவத்தன்று, சிறுவன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டான். அப்போது, குலாப்சந்தை பார்ப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வந்தார். அந்த நேரத்தில் அறையில் குலாப்சந்த் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உரண் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குலாப்சந்த் அறையில் வைத்திருந்த ரூ.11 ஆயிரம் சம்பள பணமும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக போலீசார் 14 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தினார்கள். இதில், அவன் தான் குலாப்சந்தை கொன்று பணத்தை திருடிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:–

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் குலாப்சந்துக்கும், சிறுவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது, சிறுவனை அவர் அடித்து உதைத்து இருக்கிறார். இது அவர் மீது சிறுவனுக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தான்.

அதற்கான சந்தப்பத்திற்காக காத்து கொண்டிருந்த வேளையில் தான், சம்பவத்தன்று காலையில் குலாப்சந்த் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தான். உடனே அங்கிருந்த சுத்தியலை எடுத்து அவரது தலையில் சரமாரியாக தாக்கினான். இதில், மண்டை உடைந்து குலாப்சந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அறையில் இருந்து அவரது சம்பள பணத்தை திருடிக்கொண்ட சிறுவன், தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக வழக்கம்போல் வேலைக்கு சென்று இருக்கிறான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை அதிரடியாக கைது செய்தனர்.

மைனர் என்பதால் அவன் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கர்ஜத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

மேலும் செய்திகள்