வார்டு சீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் 4–வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூர் ஆண்டிப்பாளையத்தில் வார்டு சீரமைப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4–வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீரபாண்டி,
திருப்பூர் ஆண்டிபாளையம் 59–வது வார்டில் குறிஞ்சி நகர், புவனேஸ்வரி நகர், தனலட்சுமி நகர், ஸ்ரீநிதி கார்டன், முல்லை நகர், கே.என்.எஸ்.நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வார்டு வரையறை செய்யப்பட்டதில் 59–வார்டு இடுவம்பாளையம் 40–வது வார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபாளையம் கிராமத்தோடு நீண்ட காலமாக இணைந்துள்ள இந்த பகுதியை நீண்ட தூரம் உள்ள 40–வது வார்டில் இணைப்பது அப்பகுதி மக்களுக்கு இடையூறாகவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் போகும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் இது சம்பந்தமாக எந்த ஒரு மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக வார்டு வரையறை சீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 4–வது மண்டல அலுவலகத்திற்கு ஊர் பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் வந்தனர். ஆனால் அங்கு அதிகாரிகள் இல்லாததால் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் இந்த வரையறையானது முதற்கட்டமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனை மாநில தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து அத்துடன் உங்களது கோரிக்கைகளையும் சமர்ப்பித்து இறுதியாக 12–ந் தேதிக்குள் உங்களுக்கு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறினர்.
இதற்கு பதில் அளித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், எங்களது வார்டு மாற்றி அமைக்கப்பட்டால் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை திரும்ப கொடுத்துவிட்டு ஊருக்குள் கருப்புக்கொடி கட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். ஊர் பொதுமக்களின் இந்த முற்றுகை போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.