வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை
வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி சேத்தியாத்தோப்பு பொதுப்பணித்துறை அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று சேத்தியாத்தோப்பு பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அள்ளூர் மற்றும் கிளாங்காடு ஆகிய பகுதியில் உள்ள வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு ஆதரவாக கட்டுமான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் புவனகிரி தாசில்தார் உலகாஅனந்தன், சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கலியமூர்த்தி, செந்தில்குமார், சிவமுருகன் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள், கூடலையாத்தூர் மற்றும் கள்ளிப்பாடி வெள்ளாற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதற்கு தொழிலாளர்கள், கூடலையாத்தூர், கள்ளிப்பாடி ஆகிய 2 ஊர்களும் சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே அங்கு மாட்டு வண்டிகளில் சென்று மணல் அள்ளுவதில் பெரும் சிரமம் ஏற்படும்.
இதை தவிர்க்க எங்களுக்கு அள்ளூர், கிளாங்காடு பகுதியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க புறப்பட்டு சென்றனர்.