வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை

வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை குன்னியூர் கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-01-08 22:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை கள்ளக்குறிச்சி தாலுகா குன்னியூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.

அப்போது கலெக்டரிடம் கிராமமக்கள் கூறுகையில், நாங்கள் 42 குடும்பத்தினர், குன்னியூரில் பல ஆண்டுகளாக சாலையோரத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் பகுதி நீர்பிடிப்பு இல்லாத மேடான கரைப்பகுதியாகும். எங்கள் பகுதி அருகில் நீர்பிடிப்பு வருவதற்கு முன்னரே ஏரி வடிகால் வாய்க்கால் வழியாக நீர் வெளியேறி விடும்.

இப்படியிருக்கும்பட்சத்தில் பொதுப்பணித்துறையினர், நாங்கள் குடியிருந்து வரும் வீட்டை அகற்றப்போவதாக கூறி வருகின்றனர். எங்களுக்கு இந்த வீட்டை தவிர வேறு எங்கும் மனையோ, வீடோ இல்லை. இந்த வீடுகளை அகற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே இந்த முடிவை கைவிட்டு நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மனைப்பட்டா வழங்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனை கேட்டறிந்த கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார். இதையடுத்து கிராமமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்