5–வது நாளாக வேலை நிறுத்தம்: ஈரோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

5–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் காரணமாக அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால் மாணவ–மாணவிகள் அவதி அடைந்தனர்.

Update: 2018-01-08 23:00 GMT

ஈரோடு,

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் மிக குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து நேற்றுக்காலை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவ–மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு புறப்பட்டனர். ஆனால் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் அரசு, தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சில பஸ்களில் மாணவர்கள் படியில் தொங்கியபடி சென்றனர்.

கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ–மாணவிகள் பஸ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். பல இடங்களில் அவர்கள் நடந்தே பள்ளிக்கூடங்களுக்கு சென்றதையும் காணமுடிந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பஸ்கள் ஓடாததால் மாணவ–மாணவிகள் சிலர் மாட்டு வண்டிகளில் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். இதேபோல் பெற்றோர்கள், உறவினர்கள் மாணவ–மாணவிகளை பள்ளிக்கூடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் காலையில் கொண்டு சென்றுவிட்டு, மாலையில் அழைத்து வந்தனர்.

குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் ஈரோடு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே பயணிகள் பஸ்களுக்காக காத்திருந்தனர். திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அடிக்கடி தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் சென்று வர முடிந்தது. ஆனால் அந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்ததும் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினார்கள். திண்டுக்கல், மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி போன்ற தொலைதூர ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமப்பட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்டோர் திரண்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சென்னிமலை ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் அங்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.19 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். 1–4–2003 தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது செந்தில்குமார் என்பவர் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தார். அவர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பகுதியில் சரக்கு ஆட்டோவை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து துண்டு பிரசுரம் வழங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், செந்தில்குமாரை அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்