கொய்யாக்காயை அறுத்தபோது விபரீதம்: தொடையில் அறுபட்டு மாணவர் சாவு

ஆனைமலையில் கொய்யாக்காயை அறுத்த போது தவறுதலாக கத்தி தொடையை அறுத்துக்கொண்டதால் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-01-08 22:15 GMT

ஆனைமலை,

ஆனைமலை மொய்தீன்கான் வீதியைச் சேர்ந்தவர் சிராஜூதீன். இவர் மாற்றுத்திறனாளி. இவரது மகன் அன்சாத் (வயது 14). இவர் ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்குச்செல்லும் போது அன்சாத் கொய்யாக்காய் மற்றும் அதனைவெட்டி சாப்பிடுவதற்காக சிறியகத்தி ஒன்றையும் எடுத்து வந்துள்ளார். காலை 9. 30 மணிக்கு தொடங்கிய முதல் வகுப்பில் ஆசிரியை சந்திரகலா தமிழ் பாடம் நடத்தினார். பின்னர் 10.15 மணிக்கு முதல் வகுப்பு முடிவடைந்ததும் ஆசிரியை சந்திரகலா வகுப்பை விட்டு வெளியேறினார். பின்பு மாணவர் அன்சாத் தனது புத்தகப்பைக்குள் வைத்திருந்தகொய்யாக் காயை எடுத்து, தனது தொடை பகுதியில் வைத்து, தான் கொண்டுவந்த கத்தி மூலம் சிறிய துண்டுகளாக வெட்டி சாப்பிட தொடங்கினார்.

அப்போது திடீரென அந்த கத்தி தவறுதலாக அன்சாத்தின் இடதுதொடையில் வெட்டியது. இதில் தொடையிலிருந்து இதயத்திற்கு செல்லும் முக்கிய நரம்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மாணவர் அன்சாத் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அருகிலிருந்த மாணவர்கள்அவரை மீட்டு 3–வது மாடியிலிருந்து முதல் தளத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் உடற்பயிற்சி ஆசிரியர் சேகர் மற்றும் மாணவர்கள் காயமடைந்த மாணவர் அன்சாத்தை ஆட்டோவில் ஏற்றி வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அதிக ரத்தம் வெளியேறியதால் மாணவர் அன்சாத் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக அரசு மருத்துவர் அழகப்பசாமி கூறிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வால்பாறை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், ஆனைமலை சப்– இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார்ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி ஜெயராணி, வகுப்பு ஆசிரியைகள் சந்திரகலா, மாரியம்மாள், உடற்பயிற்சிஆசிரியர் சேகர், ஆசிரியர்கள் மற்றும் உடனிருந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் மாணவர்அன்சாத்தின் பிரேத பரிசோதனை நடைபெற்றது. மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு குவிந்தனர். மாணவர் இறந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர் அன்சாத் இறந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்