ரவுடி கொலையில் சிறுவன் உள்பட 6 பேர் கைது

சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நடந்த ரவுடி கொலையில் சிறுவன் உள்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-08 23:30 GMT

ராயபுரம்,

சென்னை வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற வெள்ளை சரவணன் (வயது 34). ரவுடியான இவர் மீது அடிதடி, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரவணன் மனைவி கஜலட்சுமி (28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கருத்துவேறுபாடு காரணமாக ஒரு ஆண்டுக்கு முன்பு கஜலட்சுமி சரவணனை விட்டுப் பிரிந்தார். அதன் பிறகு அதே பகுதியை சேர்ந்த ஜீனத் (35) என்பவருடன் சரவணன் குடும்பம் நடத்தி வந்தார். வழக்கு ஒன்றில் கைதாகி சரவணன் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கு முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆர்.கே.நகர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு சரவணனை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், சம்பத் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில், சரவணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த இளவரசன், தென்னரசு ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மேலும் சரவணன் சிறையில் இருந்தபோது, தென்னரசு (24) ஜீனத்தை உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜாமீனில் வெளியேவந்த சரவணனிடம் ஜீனத் தெரிவித்தார். இதனால் சரவணன் கடும் ஆத்திரம் அடைந்தார். தென்னரசை சந்தித்து இன்னொரு முறை இதுபோல் நடந்துகொண்டால் தீர்த்துக்கட்டிவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். கடந்த 6–ந் தேதி இரவு சரவணன் நண்பரை பார்க்க கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகருக்கு சென்றுவிட்டு ஆர்.கே.நகர் மீனம்பாள் நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தென்னரசு தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி பகுதியில் பதுங்கி இருந்த தென்னரசு, அவருடைய அண்ணன் இளவரசன்(32), சண்முகம்(21), சுரேஷ்(22), சாம்சுந்தர்(21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்