கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி கைது

கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-01-08 23:00 GMT

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மனு கொடுக்க பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். இந்த நிலையில், கலெக்டர் அலுவலகம் நோக்கி வாலிபர் ஒருவர் ஒரு கையில் தீப்பந்தமும், மற்றொரு கையில் கேனில் மண்எண்ணெயும் கொண்டு வந்தார்.

நடந்து வரும் போதே உடலில் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டே வந்தார். அவர் தனது கழுத்தில் கயிறு தொங்கவிட்டு இருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் காலனி பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் வேல்முருகன் (வயது 27) என்பவதும், அவர் கூலித்தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து வேல்முருகனை போலீசார் ஜீப்பில் ஏற்றி தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தற்கொலைக்கு முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார்.

தீக்குளிக்க முயன்றது தொடர்பாக வேல்முருகன் கூறியதாவது:–

எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரவில்லை. சாக்கடை கால்வாய் சரியில்லை. மயானத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. குடியிருப்பு பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் சார்பில் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து விட்டோம். ஆனால், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஜனநாயக நாட்டில் எங்கள் குடியிருப்புகளுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. அதனால், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் அலுவலகத்துக்கு தீப்பந்தத்துடன் தொழிலாளி வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்