உள்ளாட்சி வார்டு சீரமைப்பு: சிறுபான்மையினர் நலன் காக்கப்பட வேண்டும் இந்திய தேசிய லீக் கோரிக்கை

உள்ளாட்சி வார்டு சீரமைப்பில் சிறுபான்மையினர் நலன் காக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-01-08 22:15 GMT
விருதுநகர்,

உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு சீரமைப்பு தொடர்பாக இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜகாங்கீர் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் ரீதியாக மக்கள் தொகைக்கு ஏற்ப முஸ்லிம் சிறுபான்மை மக்கள் முக்கியத்துவம் பெற முடியவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே முஸ்லிம் மக்கள் போட்டியிடும் அளவுக்கு முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மீதி இடங்களில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியாக ஒரே ஊராகவோ, அல்லது ஒரே தெருவாகவோ குடியிருப்பு பகுதிகள் அமையபெறவில்லை.

எனவே வார்டு சீரமைப்பின் போது எங்களுக்குள்ள குறைந்த அளவு அரசியல் முக்கியத்துவம் முற்றிலும் இல்லாமல் போய்விடும். எனவே முஸ்லிம் சிறுபான்மையினர் நலன் பெரிதும் பாதிக்கப்படும். நலன் காக்க முஸ்லிம் வார்டுகளாக உள்ள பகுதியை வார்டு சீரமைப்பில் இருந்து விலக்கு அளித்து தற்போது உள்ள நிலையே தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் காலனி மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் காலனியில் 50 வருடங்களுக்கு முன்னர் தண்ணீர் சேமிப்பதற்காக குழிகள் வெட்டி உள்ளனர். தற்போது அந்த குழிகள் கிராமத்தின் நடுவில் அமைந்துள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கோவில் திருவிழாவின் போது 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன் இந்த குழிக்குள் விழுந்து இறந்துவிட்டான். ஆண்டு தோறும் குறைந்தபட்சம் 5 பேர் குழிக்குள் விழுந்து இறக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே 12 அடி ஆழம் கொண்ட 3 குழிகளையும் மூடி உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்