தற்காலிக டிரைவர்களால் அரசு பஸ் பயணத்தை புறக்கணிக்கும் பயணிகள்

ராமநாதபுரத்தில் கிராமப்புறங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணம் பாதுகாப்பாக இருக்காது என்று அச்சம் அடைந்த பயணிகள் அரசு பஸ் பயணத்தை புறக்கணித்து வருகின்றனர்.

Update: 2018-01-08 23:00 GMT

பனைக்குளம்,

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதையடுத்து அந்த போராட்டங்களை முறியடிக்கும் வகையில் ராமநாதபுரம் நகரில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி ராமநாதபுரத்தில் இருந்து கேணிக்கரை வழியாக கோப்பேரிமடம், சித்தார்கோட்டை, அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம் வழியாக அழகன்குளம் வரை செல்லும் தடம் எண் 6 மற்றும் 6–ஏ ஆகிய அரசு டவுன் பஸ்களும், இதேபோல ராமநாதபுரத்தில் இருந்து பாரதிநகர், கலெக்டர் அலுவலகம், குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர் வழியாக ஆற்றங்கரை செல்லும் தடம் எண் 19 மற்றும் 19–ஏ ஆகிய அரசு டவுன் பஸ்கள் அதே பகுதியை சேர்ந்த தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. புதிய கண்டக்டர்களுக்கு ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திற்கும் உரிய கட்டணம் பற்றி குறிப்பு வழங்கப்பட்டுஉள்ளது. அதனை பார்த்து அவர்கள் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி வருகின்றனர்.

ஆனால் கண்டக்டருக்கு உரிய உபகரணம் வழங்கப்படாததால் கட்டணத்துக்கான பணத்தை துணிப்பையில் போட்டு வைத்துவருகின்றனர். தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு டவுன்பஸ்கள் இயக்கப்படுவதால் பயணம் பாதுகாப்பாக இருக்காது என்று அச்சம் அடைந்த பயணிகள் அரசு பஸ்களில் பயணத்தை புறக்கணித்து வருகின்றனர்.

இதனால் அரசு பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைவாக உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் வெகுவாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எனவே இதேநிலை தொடராமல் இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டிட தொழிலாளர்கள், பால் வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்–மண்டபம் இடையே இயக்கப்படும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளதால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துதுறையினருக்கு பயணிகள்கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர ராமநாதபுரம்–ராமேசுவரம் இடையே வழக்கமாக செல்லக்கூடிய பஸ்கள் இல்லாததால் பாரதிநகர், வாலாந்தரவை, ரெகுநாதபுரம், வழுதூர், பெருங்குளம், உச்சிப்புளி, புதுமடம், வேதாளை, இருமேனி, பிரப்பன்வலசை, மரைக்காயர்பட்டினம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

 மேலும் இந்த வேலை நிறுத்தத்தை காரணம்காட்டி தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்