இளையான்குடியில் சேதமடைந்த தாலுகா அலுவலக கட்டிடத்தால் ஊழியர்கள் அச்சம்
இளையான்குடி தாலுகா அலுவலக கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளதால் அங்கு பணியாற்றும் ஊழியர்களும், அங்கு வரும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் பெரிய தாலுகாவாக இளையான்குடி உள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்டு 70 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள் சான்றிதழ் உள்ளிட்ட தங்களது தேவைக்காக இளையான்குடி தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இளையான்குடியில் தாலுகா அலுவலகம் கடந்த 1989–ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 28 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் அலுவலக கட்டிடம் தற்போது பல இடங்களில் மேல்கூரை பெயர்ந்த நிலையிலும், சுவர்கள், தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள நில அளவையர் அலுவலகம், பொதுமக்கள் காத்திருப்பு பகுதியான தரைத்தளம் உள்ளிட்ட இடங்களில் கட்டிட சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தரைத்தளத்தில் உள்ள டைல்ஸ் கற்கள் பெயர்ந்து, அங்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம்பார்த்து வருகின்றன. மேலும் மேல் தளத்திற்கு செல்லும் மாடி படிகளும் சேதமடைந்தும், கட்டிட தூண்கள் விரிசல் ஏற்பட்டும் உள்ளது.
சேதமடைந்த கட்டிடத்தால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் தினசரி அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் நேற்று கட்டிடத்தில் மேல் தளத்தில் உள்ள நில அளவையர் அலுவலகத்தினுள் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து, ஊழியர்கள் பயன்படுத்தும் மேசை மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஊழியர்களுக்கு எதுவும் ஆகவில்லை. எனவே தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.