பாக்டீரியாக்களைக் கொல்லும் இரும்பு நானோ முள்!

பாக்டீரியாக்களை இனம்கண்டு கொல்லும் திறன்கொண்ட உயிர்கொல்லி மருந்துகளை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

Update: 2018-01-08 08:04 GMT
தினசரி நம் வாழ்க்கையில் பல சவால்களை வெற்றிகரமாக கடந்து சென்றால்தான் வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைகளை அடைய முடிகிறது. சாலை விபத்து போன்ற உயிர்கொல்லும் பேராபத்துகளில் இருந்து நம்மைநாமே பாதுகாத்துக்கொள்வது எளிது. ஆனால், நம்மால் காண முடியாத, ஆனால் உயிர்கொல்லும் கோடிக்கணக்கான பேராபத்து களான பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட உயிர்கொல்லி நுண்ணியிரிகளை நாம் தினசரி 24 மணிநேரமும் சந்திக்கத்தான் செய்கிறோம்.

பாக்டீரியாக்களை இனம்கண்டு கொல்லும் திறன்கொண்ட உயிர்கொல்லி மருந்துகளை நாம் உருவாக்கி இருக்கிறோம். ஆனால், இதுவரை மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான உயிர்கொல்லி மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை (antibiotic resistance) பாக்டீரியாக்கள் உருவாக்கிக்கொண்டு, பல உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

இதன் காரணமாக, பாக்டீரியாக்களால் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சக்திவாய்ந்த ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பல ஆண்டுகாலமாக முயன்று வந்தாலும், அது இன்னும் சாத்தியப்படவில்லை.

அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா டெக் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பாக்டீரியாக்களை அழிக்கும் இரும்பு நானோ முட்கள் (Ste-el Na-no spi-kes) எனும் ஒரு தொழில்நுட்பத்தை சமீபத்தில் உருவாக்கியுள்ளனர். வெறும் 25 நானோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நானோ முட்கள் பாக்டீரியாவின் உயிரணுக்களை துளைத்து உள்நுழையக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, ஸ்டாபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) போன்ற கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா (Gram positive bacte-ria) மற்றும் மருந்து எதிர்ப்பு சக்தி அதிகமாகக் கொண்ட ஈ.கோலை (E. coli) போன்ற கிராம் நெகட்டிவ் பாக்டீரியா (Gram negative bacteria) ஆகிய இரண்டு வகையான பாக்டீரியாக்களை கொல்லும் திறன் இரும்பு நானோ முட்களுக்கு உண்டு என்று கூறப்படுகிறது.

இந்த இரும்பு நானோ முட்களை உருவாக்க இரும்பு தாள்களின் மீது மின்சாரம் செலுத்தி பின்னர் அவற்றை நைட்ரிக் அமிலத்தில் மூழ்க வைப்பர். இந்த வேதியியல் வினை காரணமாக இதன் மேற்பரப்பு மாற்றமடையும். குறிப்பிட்ட அளவில் மின்சாரத்தை இரும்பின் மீது பாய்ச்சினால் அதன் மேற்பரப்பில் பாக்டீரியாக்களைக் கொல்லும் நானோ முட்கள் உற்பத்தியாகும் என்று கூறப்படுகிறது.

நானோ முட்களை உற்பத்தி செய்யும் வேதியியல் செய்முறையானது இரும்பை பாலிஷ் செய்ய பயன்படுத்தப்படும் வேதியியல் செய்முறைக்கு நிகரானது என்பதால் நானோமுட்கள் கொண்ட இரும்பை உற்பத்தி செய்வது எளிது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிரந்தரமாக நோய்க்கிருமிகள் படராமல் இருக்கும் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவக் கருவிகளை (permanently sterile surgical and medical equipment) உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மேலும், இந்த நானோ முள் தொழில்நுட்பம், உணவு தயாரிக்கும் கருவிகள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக மற்றும் சுகா தாரமாக வைத்து பராமரிக்கவும் உதவும். அதாவது, உங்கள் அருகிலுள்ள எவர்சில்வர் கடைகளில் பாக்டீரியா தொற்றே ஏற்படாத எவர்சில்வர் பாத்திரங்கள் கூட விரைவில் விற்பனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

அது சரி, இந்த நானோ முள் மேற்பரப்பு கொண்ட மருத்துவக் கருவிகள் மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? என்று நீங்கள் கேட்டால், அப்படி எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனை நிரூபிக்க, முதற்கட்டமாக எலியின் உயிரணுக்களை இந்த நானோ முள் தொழில்நுட்பம் பாதிக் கிறதா என்று பரிசோதிக்கப்பட்டது. பாக்டீரியாக்களுடன் ஒப்பிடுகையில் எலியின் உயிரணுக்கள் மிகப்பெரியவை என்பதால், நானோ முட்கள் எலியின் உயிரணுக்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதை இந்த ஆய்வின் மூலம் உறுதிசெய்துள்ளனர் ஜியார்ஜியா டெக்கைச் சேர்ந்த ஆய்வாளர்கள். 

மேலும் செய்திகள்