கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-07 22:20 GMT
புனே,

கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்

புனே டிங்கரே நகர் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட ஆசாமி ஒருவர் வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நடமாடிய வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் கத்தை, கத்தையாக 100 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் லோகே காவை சேர்ந்த சந்தீப் வசந்த்(வயது34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

என்ஜினீயர்

இதில், அந்த கள்ளநோட்டுகளை கோலாப்பூரை சேர்ந்த உதய் பிரதாப்(34) என்பவர் தன்னிடம் புழக்கத்தில் விட கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் உதய் பிரதாப்பை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து 45 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், உதய் பிரதாப் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

கைதான உதய் பிரதாப் 100, 50 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து கள்ள நோட்டுக்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி, பிரிண்டர் உள்பட பல பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்