14 பேரை பலிகொண்ட கமலா மில் தீ விபத்து கைதான ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி மகனுக்கு போலீஸ் காவல்

14 பேரை பலிகொண்ட கமலா மில் தீ விபத்து தொடர்பாக கைதான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி மகன் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2018-01-07 22:30 GMT

மும்பை,

14 பேரை பலிகொண்ட கமலா மில் தீ விபத்து தொடர்பாக கைதான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி மகன் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

தீ விபத்து

மும்பை லோயர்பரேல் கமலா மில் வளாகத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் செயல்பட்டு வந்த ‘ஒன் அபோவ்’ மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ ஆகிய 2 கேளிக்கை விடுதிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில், அங்கு பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக ‘ஒன் அபோவ்’ கேளிக்கை விடுதியின் உரிமையாளர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த கேளிக்கை விடுதியின் மேலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போலீஸ் காவல்

இந்தநிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு படையினர் நடத்திய விசாரணையில், ‘மோஜோ பிரிஸ்டோ’ கேளிக்கை விடுதியில் ஹூக்கா புகைத்தபோது, பறந்த நெருப்பு பொறி பறந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த கேளிக்கை விடுதியின் உரிமையாளர் யுக்பதக் மற்றும் நாக்பூரை சேர்ந்த பங்குதாரர் யுக் துல்லி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்களில் யுக்பதக் முன்னாள் டி.ஜி.பி. கே.கே.பதக்கின் மகன் ஆவார்.

யுக்பதக்கை நேற்றுமுன்தினம் போலீசார் புனேயில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர் நேற்று தாதர் போய்வாடா கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை வருகிற 12–ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்