அழகு நிலையத்தில் பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி கணவன் மனைவி கைது
அழகு நிலையத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த கணவன்–மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம், ராஜாஜி அவென்யூ, 2–வது தெருவைச் சேர்ந்தவர் சதீஸ்(வயது 35). இவருடைய மனைவி சுவாதி(30). இவர்கள் இருவரும் சேர்ந்து வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அழகு நிலையம் நடத்தி வந்தனர்.
இந்த அழகு நிலையத்துக்கு வந்த வளசரவாக்கத்தை சேர்ந்த உமா(50) என்பவரிடம், அழகு நிலைய தொழில் குறித்தும், இதில் கிடைக்கும் லாபம் குறித்தும் பேசினர்.
மேலும் அவர்கள், ‘‘இந்த அழகு நிலையத்தை விரிவுப்படுத்தப்போகிறோம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால், உங்களையும் இந்த அழகு நிலையத்தில் ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்கிறோம்’’ என உமாவிடம் ஆசை வார்த்தை கூறினர்.
இதனை உண்மை என்று நம்பிய உமா, வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் என ரூ.22 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு அவரை அழகு நிலையத்தில் பங்குதாரராக சேர்க்கவில்லை. அவரிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் கணவன்–மனைவி இருவரும் ஏமாற்றி வந்தனர்.
இது குறித்து வளசரவாக்கம் போலீசில் உமா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கணவன், மனைவி இருவரும் உமாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து சதீஸ், சுவாதி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.