போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தற்காலிக டிரைவர்கள் இயக்கும் பஸ்சில் ஏற பயணிகள் அச்சம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்காலிக டிரைவர்கள் இயக்கும் பஸ்சில் ஏற பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2018-01-07 23:00 GMT
திருவண்ணாமலை,

ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் நீடித்தது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இருப்பினும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் போக்குவரத்து துறையினர் தற்காலிக ஊழியர்களை பயன்படுத்தி பஸ்களை இயக்கி வருகின்றனர். மேலும் போக்குவரத்து துறையினர் பொதுமக்களின் வசதிக்காக வேலூர் மண்டலத்தில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளி பஸ்சையும் பயன்படுத்தினர். தற்காலிக டிரைவர்களில் சிலருக்கு சரிவர அரசு பஸ்களை இயக்க தெரியாது என்று கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக நேற்று திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் வேலூர் செல்லும் அரசு பஸ்சை இயக்கிய தற்காலிக டிரைவர் அதனை பின்னோக்கி இயக்குவதற்கு சிரமப்பட்டார்.

மேலும் பணியில் இருக்கும் தற்காலிக பஸ் டிரைவர்கள் சீருடை அணியாமல் சாதாரண உடையிலேயே காணப்பட்டனர். சீருடை அணியாமல் இருக்கும் தற்காலிக பஸ் டிரைவர்களை கண்டதும் பயணிகள் பஸ்சில் ஏறி பயணம் செய்ய அச்சப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். மேலும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் எதிரொலியாக திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

மேலும் வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன. பெங்களூரு, சேலம், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டது. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பயணிகள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு சுமார் 7-30 மணியளவில் சந்தவாசல் அருகே சென்றபோது பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கி விழுந்தது. இதனால் அந்த பஸ்சை டிரைவர் மற்றும் கண்டக்டர் சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர். யாரேனும் பஸ்சின் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தனரா அல்லது தானாக உடைந்து விழுந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்