போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு கடலூர் மாவட்டத்தில் 4–வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் கடலூர் மாவட்டத்தில் நேற்று 4–வது நாளாக அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.;
கடலூர்,
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தடை வித்தது. மேலும் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று 4–வது நாளாக போராட்டம் நீடித்தது.
கடலூர் மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து கழக பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்கள் பணிமனை முன்பு திரண்டு நின்றனர். இதனால் அரசு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரு சில பணிமனைகளில் தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்கள் வழக்கம்போல இயங்கி வருகின்றன. உள்ளூர் மட்டுமின்றி சென்னை, திருச்சி போன்ற வெளியூர்களுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதை காண முடிந்தது.
மாவட்டத்தின் தலைநகரான கடலூர் பஸ்நிலையத்தில் தனியார் பஸ்கள் வழக்கம்போல வந்து சென்றன. அரசு பஸ்கள் விரல்விட்டு எண்ணும் வகையில் இயக்கப்பட்டதை பார்க்க முடிந்தது.
மதியம் 3 மணி வரை உள்ள நிலவரப்படி கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்பட வேண்டிய 170 பஸ்களில் 80 பஸ்களும், மாவட்டம் முழுவதும் உள்ள 11 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய 516 அரசு பஸ்களில் 330 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் பஸ்களில் குறைந்த அளவிலேயே பயணிகள் கூட்டத்தை காண முடிந்தது. மாலை நேரத்துக்கு பிறகு பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இது குறித்து பஸ் பயணி ஒருவர் கூறியதாவது:–
அரசு பஸ்கள் ஓடாததால் வெளியூர் சென்று வர முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தற்காலிக டிரைவர்கள் மூலம் குறைந்த அளவு இயக்கப்படும் அரசு பஸ்களிலும் பயணம் செய்ய அச்சமாக இருக்கிறது. இதனால் தனியார் பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் தான் பயணம் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்பது போல சிலர் பயண கட்டணத்தை கூடுதலாக வசூல் செய்கிறார்கள்.
மேலும் சில பஸ்களில் வினியோகம் செய்யப்படும் டிக்கெட்டுகளில் பஸ்சை பற்றியும், புறப்படும் இடம், சேரும் இடம் போன்ற எந்த விவரமும் இருப்பது இல்லை, இது டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்கு வசதியாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. எனவே கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்காலிக டிரைவர்களில் நல்ல திறமையானவர்களை மட்டும் தேர்வு செய்து அரசு பஸ்களை விபத்து இல்லாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் டிரைவர்களிடம் நல்ல நிலையில் உள்ள அரசு பஸ்களை இயக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.