கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 100 பஸ் தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பணிக்குவராத டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் என 4 ஆயிரத்து 100 பஸ் தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு அரசு போக்குவரத்து கழகம் நோட்டீசு அனுப்பியுள்ளது.

Update: 2018-01-07 22:30 GMT

கடலூர்,

ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு, ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் எச்சரித்தது. ஆனாலும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 4–வது நாளாக நீடித்தது.

இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், இல்லை என்றால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார். அதன்படி நேற்று பணிக்கு வராத பஸ் தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பும் பணியில் போக்குவரத்து துறை ஈபட்டு வருகிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் பணிக்கு வராத அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் 11 பணிமனைகளை உள்ளடக்கிய கடலூர் மண்டலத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 100 பஸ் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் நேற்று 1,100 பேர் பணிக்கு வந்தனர், 2 ஆயிரம் பேர் பணிக்கு வரவில்லை. இவர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 62 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன என்றார்.

மேலும் செய்திகள்