பனப்பாக்கம் பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

பனப்பாக்கம் அருகே நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு அமைய உள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

Update: 2018-01-07 22:45 GMT
பனப்பாக்கம்,

பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம்புதூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு 3¾ ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனை மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது இந்த பகுதியில் சேமிப்பு கிடங்கு அமைத்தால் லாரிகள் வந்து செல்ல தாராளமான இடவசதி உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். அப்போது பொங்கல் பரிசு வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்த பெண்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் ரேஷன் கடையில் உளுந்தம் பருப்பு வழங்கி பல மாதங்கள் ஆகிறது என்று புகார் தெரிவித்தனர்.

அதற்கு அவர், கடந்த சில மாதங்களாக உளுந்தம் பருப்பு ரேஷன் கடைகளுக்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து ரேஷன்கடை தினமும் திறக்கப்பட்டு பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா? என்று மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் கேட்டார். அப்போது பொதுமக்கள், தற்போது ரேஷன் கடையில் 1059 குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த கடையை 2 ஆக பிரித்து இதே பகுதியில் மேலும் ஒரு ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.

அதனை தொடர்ந்து பனப்பாக்கத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே புதிதாக நெமிலி தாசில்தார் குடியிருப்பு கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நெடும்புலி கிராமத்தில் ரேஷன்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

ஆய்வின்போது நெமிலி தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள் ராம்மோகன், சந்தியா, துணை தாசில்தார் காஞ்சனா, வட்ட வழங்கல் அலுவலர் பெருமாள், கிராம நிர்வாக அலுவலர்கள் பூபாலன், செந்தில்நாதன், கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்