கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்கக்கோரி 10 கிராம விவசாயிகள் சாலைமறியல்

திருவாரூர் அருகே கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்கக்கோரி 10 கிராம விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-01-07 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து காலம் கடந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தால் குறுகிய கால நெல் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அதனை தொடர்ந்து தண்ணீரை வடிய வைத்து மீண்டும் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கினர்.

தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே நாரணமங்கலம் பகுதியில் உள்ள பாண்டவையாற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், ஆற்றின் பாசனம் பெறும் மாங்குடி, கூடூர், நாலூர், மருவத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட 17 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 10 கிராம விவசாயிகள் நேற்று திருவாரூர் அருகே நாரணமங்கலம் பாலம் அருகில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாமைறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தண்ணீர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தினால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்