டிராக்டர் கவிழ்ந்து பிளஸ்-2 மாணவர் பலி நண்பர் படுகாயம்

முத்துப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து பிளஸ்-2 மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-01-07 22:45 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கீழவாடியகாடு சர்வமானியம் பகுதியை சேர்ந்தவர் மணிவாசகன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் பிரவீன் (வயது17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தீபன் (18). இவரும், பிரவீன் படித்த பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் இரவு மேலதொண்டியக்காட்டில் இருந்து டிராக்டரில் மண் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தனர். டிராக்டரில் ஏற்றப்பட்ட மண்ணின் மீது 2 பேரும் அமர்ந்து வந்தனர். அப்போது தில்லைவிளாகம் அருகே வந்த போது நிலைதடுமாறி டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தான். தீபன் படுகாயம் அடைந்தான். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்