மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்டக்கோரி 18–ந்தேதி ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்டக்கோரி வருகிற 18–ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம்.

Update: 2018-01-07 21:00 GMT

நெல்லை,

மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்டக்கோரி வருகிற 18–ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

பதவி விலக வேண்டும்

ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பஸ்கள் சரிவர ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஊதிய உயர்வு கேட்கும் தொழிலாளர்களிடம் 22 முறை அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் முடிவு ஏற்படவில்லை என்றால் அந்த துறைக்கு ஒரு அமைச்சர் தேவைதானா? போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறுகிறார். இது அவரது திறமையின்மையை காட்டுகிறது. எனவே அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியில் இருந்து உடனே விலக வேண்டும்.

தற்காலிக ஊழியர்களை வைத்து அரசு பஸ்களை இயக்குவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அனுபவம் இல்லாத டிரைவர்கள் பஸ்களை இயக்குவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? எனவே போக்குவரத்து தொழிலாளர்களிடம் முதல்–அமைச்சர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

18–ந்தேதி ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்துக்கு அந்த பகுதி மக்கள் நிலம் கொடுத்து உள்ளனர். நிலம் கொடுத்த மக்களின் கோரிக்கையான தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வருகிற 18–ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு, மக்கள் பணத்துக்காக யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு அளிப்பார்கள் என்ற நிலைக்கு வந்துவிட்டனர் என்பதை காட்டுகிறது. அந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தினகரன் அணி என அனைவரும் பணம் கொடுத்து உள்ளனர். இவர்களில் தினகரன் கூடுதல் பணம் கொடுத்து வெற்றி பெற்று உள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தற்போது அறிவித்து உள்ளார். அவர் அரசியலுக்கு வரட்டும், அதன்பிறகு அவரது நடவடிக்கை, கொள்கைகளை பார்த்து கருத்து சொல்கிறேன். அரசியலுக்கு நல்லவர்கள் வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில செய்தி தொடர்பாளர் சுதாகர், மாவட்ட செயலாளர் ரவிதேவேந்திரன், போக்குவரத்து கழக தொழிற்சங்க மண்டல செயலாளர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்