போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் நெல்லையில் தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன
போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நெல்லையில் தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன.
நெல்லை,
போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நெல்லையில் தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன.
வேலைநிறுத்தம்அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 13–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னையில் கடந்த 4–ந்தேதி நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அன்று இரவு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்டத்தில் உள்ள ஊழியர்களும் கடந்த 4–ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 4–வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை கோட்டத்தில் மொத்தம் 18 பணிமனைகள் உள்ளன.
கடந்த 3 நாட்களாக நெல்லை கோட்டத்தில் உள்ள பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தற்காலிக பணியாளர்கள்நெல்லை கோட்டத்தில் நேற்று காலை முதல் 75 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கப்பட்டன. இதற்காக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பொதுமேலாளர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் நடந்து வருகிறது. காலையில் பணிக்கு வந்த தற்காலிக டிரைவர், கண்டக்டர்களிடம் பொறுப்புகளை அதிகாரிகள் ஒப்படைத்து பஸ்களை ஓட்ட சொன்னார்கள். தற்காலிக பணியாளர்கள் தேர்வுக்கு அரசியல் வாதிகளின் சிபாரிசு இருந்தால் தான் தேர்வு செய்யப்படவார்கள் என்று கூறியதால் பலர் தங்களுடைய ஊரில் உள்ள அ.தி.மு.க. பிரமகர்களிடம் கடிதம் வாங்கி வந்து பணிக்கு சென்றனர். பலர் ஊர்களில் ஷேர் ஆட்டோ, வேன், டிராக்டர்கள் ஓட்டியவர்கள் தான் பணிக்கு வந்தனர். இந்த தற்காலிக டிரைவர்களை வைத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் உள்ள 492 பஸ்கள் இயக்கப்பட்டன.
3 நாட்களாக நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கும், கிராமங்களுக்கும் இயக்கப்படாமல் இருந்த பெரும்பாலான பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. பஸ்கள் தற்காலிக பணியாளர்களை வைத்து இயக்குவதால் பொதுமக்கள் பஸ்களில் செல்வதை தவிர்த்து சொந்த வேன், கார்களில் செல்கிறார்கள்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பஸ்களில் பயணணம் செய்வதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் நெல்லை சந்திப்பு, புதிய பஸ்நிலையங்களில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தற்காலிக பணியாளர்களிடம் போக்குவரத்து கழக அதிகாரிகள் பழைய பஸ்களை மட்டுமே ஓட்ட கொடுத்தனர். ஆனால் புதிய பஸ்கள் மற்றும் எந்தவித குறைபாடும் இல்லாத பஸ்களை பணிமனைகளிலேயே நிறுத்திவைத்து உள்ளனர். நெல்லை வண்ணார்பேட்டை, தாமிரபரணி பணிமனைகளில் பெரும்பலான பஸ்கள் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இந்த பஸ்கள் நேற்று மாலை முதல் இயக்கப்பட்டன.
தற்காலிக பணியாளர்கள் பஸ்களை இயக்குவதால் அவர்களுக்கு டிக்கெட் விலை தெரியவில்லை. பஸ் நிறுத்தம் தெரியவில்லை, பஸ் செல்கின்ற வழிப்பதை தெரியவில்லை இதனால் பல ஊர்களுக்கு செல்லாமலே பஸ்கள் நேர் வழியில் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திடீர் போராட்டம்நெல்லை சந்திப்பில் இருந்து மானூர், அழகியபாண்டிபுரம் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஊர்மக்கள் நேற்று மதியம் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தூத்துக்குடி,
அரசு பஸ் ஊழியர்கள் நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருவதால், நேற்று 4–வது நாளாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்காலிய ஓட்டுனர்கள் மூலம் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.
வேலைநிறுத்தம்
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4–வது நாளாக போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மாற்று டிரைவர்கள், நடத்துநர்கள் மூலம் பஸ்சை இயக்க அரசு முடிவு செய்தது.
190 பேர் தேர்வு
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பஸ், லாரி ஓட்டுநர்கள், பள்ளி, கல்லூரி வாகனம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அரசு பஸ்சை இயக்குவதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, மாவட்டத்தில் 102 ஓட்டுநர்கள், 89 நடத்துநர்கள் ஆக மொத்தம் 190 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலையில் அதிக அளவில் ஓட்டுநர்கள் இருந்தும், போதுமான நடத்துநர்கள் இல்லாததால் பல பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
நேற்று காலையில் மாவட்டத்தில் 7 டெப்போக்களில் உள்ள 384 பஸ்களில் 178 பஸ்கள் இயக்கப்பட்டன. அதேசமயம், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த பஸ்களில் நீண்ட நேரம் மக்கள் காத்திருந்து பஸ்களில் ஏறிச் சென்றனர். தனியார் பஸ்களும், ஆம்னி பஸ்களும், மினி பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் தூத்துக்குடி பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.