அரிசிக்கு சரக்கு, சேவை வரியை நீக்க வேண்டும் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

அரிசிக்கு சரக்கு, சேவை வரியை நீக்க வேண்டும் என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-01-07 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் கரூர் டவுனில் ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட்ராமன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கண்ணன் வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். கரூர் மாவட்ட அனைத்து தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜூ, மாவட்ட வர்த்தக சங்கத்தின் பொருளாளர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

அரிசிக்கு சரக்கு, சேவை வரியை முழுமையாக நீக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் உள்ள கடுமையான பிரிவுகளை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் நகராட்சியில் வணிகர்கள் பல்வேறு வரிகளை செலுத்தி வருகிற நிலையில் குப்பைகள் அள்ளுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணை தலைவர் கோவிந்தராஜ், இணை செயலாளர் சக்திவேல், ஆலோசகர் முகம்மது மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்