ரெகுநாதபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்

கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-01-07 22:45 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் புனித அடைக்கலமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதில் ஆலயத்தின் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டு, தடுப்புக்கட்டைகள் போடப்பட்டது. முதலில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளை மருத்துவகுழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் அடைக்கல மாத ஆலயத்திற்கு சொந்தமான காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனை யாரும் அடக்க முன் வரவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 120 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

இதில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவமனை குழுவினர் சிகிச்சை அளித்தனர். பலத்த காயம் அடைந்த 2 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பின்னர் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்முத்தலிப் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி தலைமையில் போலீசார் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்