சிறப்பு தேர்வு முடித்திருப்பவர்களுக்கு நேரடியாக துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும்

துணை தாசில்தாருக்கான சிறப்பு தேர்வை முடித்திருப்பவர்களுக்கு நேரடியாக துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-01-07 22:30 GMT
புதுக்கோட்டை,

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று மாநில செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர் போஸ் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் 1999-ல் நியமனம் செய்யப்பட்ட 992 பேரில் 747 பேருக்கு 2016-ல் பணி ஒழுங்குப்படுத்தி உத்தரவிட்டு, தொடர்ந்து 652 பேருக்கு பணி நிரந்தரப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, எந்தவித பணப்பயனும் இல்லாமல் பலர் ஓய்வு பெற்று உள்ளார்கள். பணியில் சேர்ந்த நாளில் இருந்து இவர்களுக்கு பணப்பயன் கிடைக்குமாறு மறுஉத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பதவிகளை உருவாக்கிய முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்-க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள முழுஉருவ வெண்கல சிலையினை நிறுவிட அரசு சார்பில் இடம் வழங்க காலதாமதம் ஆவதால், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 24-ந் தேதி அந்த சிலையை திறப்பது, துணை தாசில்தாருக்கான சிறப்பு தேர்வை முடித்திருப் பவர்களுக்கு நேரடியாக துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கிராம அதிகாரியாக இருந்து கிராம நிர்வாக அலுவலர்களாக நியமிக்கப்பட்டு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசின் ஓய்வூதிய உத்தரவு 408 பொருந்தும் என அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தி தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொருந்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சேக்தாவுது, மாநில பொருளாளர் ராமநாதன், மாநில செயலாளர்கள் பிரமானந்தஜோதி, லதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொது செயலாளர் பாக்கியநாதன் வரவேற்றார். முடிவில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்