விளாத்திகுளம் அருகே வைப்பாற்று பகுதியில் 50 மணல் மூட்டைகள்–2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

விளாத்திகுளம் அருகே, வைப்பாற்றில் கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த 50 மணல் மூட்டைகளையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-01-07 21:00 GMT

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே, வைப்பாற்றில் கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த 50 மணல் மூட்டைகளையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு முயன்று தப்பி ஓடியவர்களுக்கு போலீசார் தேடிவருகின்றனர்.

மணல் கடத்தல்

விளாத்திகுளம் தாலுகா மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வைப்பாற்றில் இருந்து சட்ட விரோதமாக இரவு நேரங்களில் ஆற்று மணல் மோட்டார் சைக்கிள்களில் கடத்தி செல்லப்படுவதாகவும், அவைகள் சித்தவநாயக்கன்பட்டி, விளாத்திகுளம், மந்திகுளம், விருசன்பட்டி, பூசனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருவதாகவும், விளாத்திகுளம் தாசில்தார் லிங்கராஜூக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் அவர் மணல் கொள்ளையை தடுப்பதில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார்.

தப்பி ஓட்டம்

நேற்று காலையில் விளாத்திகுளம் பகுதியில் வைப்பாற்றில் சாக்கு மூட்டைகளில் சட்ட விரோதமாக சிலர் கடத்துவதற்காக ஆற்று மணல் அள்ளிக்கொண்டு இருப்பதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாசில்தார் லிங்கராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களை பார்த்த உடன் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர்.

மணல் மூட்டைகள் பறிமுதல்

அங்கு கடத்துவதற்கு தயாராக 50 சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் அள்ளி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அதிகாரிகள் அந்த சாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்து, ஆற்று பகுதியில் மணலை கொட்டினர். மேலும் தப்பி சென்றவர்கள் விட்டு சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விளாத்திகுளம் போலீசார், தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்