ஜெயலலிதா சாதனையை பாராட்டி மேட்டூரில் நினைவுத்தூண்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்த, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனையை பாராட்டி மேட்டூர் பூங்காவில் நினைவுத்தூண் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

Update: 2018-01-07 22:30 GMT

மேட்டூர்,

காவிரி நீரை பங்கீடு செய்வதில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு கடந்த 1991–ம் ஆண்டு வெளியிடப்பட்ட பின்பும், மத்திய அரசு, அந்த உத்தரவை அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது.

2011–ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை கடந்த 2013–ம் ஆண்டு மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை பாராட்டி மேட்டூர் பூங்கா நுழைவு வாயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

கிரானைட் கற்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள இந்த தூண்களை சுற்றிலும் புல்தரையும், வண்ணமலர் செடிகள் நட்டு பராமரிக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. இந்த நினைவுத்தூணை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 13–ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்