3 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சுவிரட்டு: சிராவயலில் சீற தயாராகும் காளைகள்

தமிழர்களின் வீரவிளையாட்டுகள் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ்பெற்றது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்.

Update: 2018-01-07 22:30 GMT

திருப்பத்தூர்,

தமிழர்களின் வீரவிளையாட்டுகள் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ்பெற்றது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர். இதற்கு இணையானது சிராவயல் மஞ்சுவிரட்டு. மஞ்சுவிரட்டு என்றாலே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல் தான் நினைவுக்கு வரும். இதற்கு அடுத்தாற்போல அரளிப்பாறை, நெடுமரம், மகிபாலன்பட்டி, கண்டரமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களிலும் மஞ்சுவிரட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. மஞ்சுவிரட்டுக்கு புகழ்பெற்ற சிராவயலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தை மாதம் 3–ம் நாள் நடைபெறுவது வழக்கம். ஆனால் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா உள்ளிட்டவை நடத்த கடந்த 2014–ம் ஆண்டு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகள் கோர்ட்டு தடையால் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டும், அரளிப்பாறை உள்பட சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மஞ்சுவிரட்டும் நடத்தப்பட்டது. ஆனால் சிராவயலில் கடந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்தப்படவில்லை.

இந்தநிலையில் வருகிற 14–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிராவயலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சுவிரட்டு நடத்தப்பட இருப்பதால் பொதுமக்கள் ஆவலுடன் உள்ளனர். இதனையொட்டி காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாடுபிடி வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். போட்டிக்கு தயாராகும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு கடந்த சில வாரங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு அவைகளுக்கு வெல்லம், பச்சரிசி, பருத்திக்கொட்டை, பேரிச்சம்பழம், கத்தரிக்காய், குளுக்கோஸ் போன்ற சத்தான உணவு வகைகள் கொடுக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வேகமாக ஓடும்போது இளைப்பு வராமல் இருக்க இஞ்சி சாரும், வேகமாக ஓடுவதற்காக நீச்சல் பயிற்சியும், தன்னை யாரும் நெருங்காத வகையில் காத்துக்கொள்ள கொம்புகளால் மண்ணை குத்தும் பயிற்சியும் காளைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேகமாக ஓடும்போது கற்கள், முட்களால் கால்களில் காயம் ஏற்படாமல் இருக்க கால் நகங்களில் இரும்பு தகடுகளால் லாடம் கட்டப்படுகிறது. இந்த ஆண்டு குறித்த நாளில் மஞ்சுவிரட்டு நடைபெறும் என்பதால் சிராவயல் கிராம கமிட்டியினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே நெடுமரத்தை சேர்ந்த காளை உரிமையாளரும், மாவட்ட ஜல்லிக்கட்டு–மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான இளங்கோ கூறியதாவது:–

காளைகளை 2½ வயது முதல் மஞ்சுவிரட்டிற்காக தயார் செய்கிறோம். அதற்காக சிறுவயதில் இருந்தே அதற்கு நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, பாய்ச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை கற்றுத்தருகிறோம். முதலில் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்க வைப்போம். அதனை தொடர்ந்து பழகிய பின்னர் பெரிய மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்க விடுகிறோம். எத்தனை கி.மீ. தூரத்தில் மஞ்சுவிரட்டு நடந்தாலும் நடந்து சென்ற பாதையிலேயே சுவாசத்தை வைத்து கொண்டு மஞ்சுவிரட்டு முடிந்ததும் தானாகவே வீடு திரும்பி வந்துவிடும். கவுரவத்திற்காக தான் இந்த காளைகளை வளர்த்து வருகிறோம்.

கோவில் மாடுகளுக்கென்று தனி மரியாதை உண்டு. அது மஞ்சுவிரட்டிலும் தொடரும். கோவில் காளைகளை அலங்கரித்து பட்டு வேட்டி, துண்டு, நெத்திப்பாரை கட்டி, கொம்பில் எலுமிச்சை பழம் குத்தி, உடல் முழுக்க சந்தனம் தெளித்து கோவிலில் இருந்து கிராமத்தினர் முன்னிலையில் வாணவேடிக்கை, மேள தாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவத்திற்கு அழைத்துவரப்படும். பின்னர் முதலில் கோவில் காளைகளை அவிழ்த்துவிடுவார்கள். கோவில் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிக்கமாட்டார்கள். காரணம் அந்த காளைகளை எந்த கோவில் தெய்வத்திற்கு நேர்ந்து விடுகிறார்களோ அந்த சாமியாகவே கருதுகின்றனர். ஆகையால் தொட்டு வணங்கிவிட்டு விட்டுவிடுவார்கள். பின்னர் தான் தொழுவம் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மாடுபிடி வீரர் நெவிலி கார்த்தி என்பவர் கூறும்போது, மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுகளில் காளைகளை அடக்கி பிடிப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறோம். இப்போட்டிகளில் கலந்து கொண்டு மாடுகளை அடக்குவது குறித்து முன்னோர்கள் கற்று கொடுத்தவாறு பின்பற்றுகிறோம். மஞ்சுவிரட்டுக்கு முந்தைய நாள் குலதெய்வத்திடம் திருவலம் கேட்டு உத்தரவு கொடுத்த பின்னரே மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு மாடுகளை பிடிப்போம். இல்லையெனில் மஞ்சுவிரட்டுக்கு செல்லமாட்டோம். பொதுவாக மஞ்சுவிரட்டு என்பது, வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்படும். அப்போது மாடுபிடி வீரர்கள் காளைகளை விரட்டிச் சென்று காளை கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் மணி மற்றும் துண்டை பிடிப்பதே இலக்கு. பாரம்பரிய விளையாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதே எங்களது தலையாய கடமை என்றார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மஞ்சுவிரட்டில் மனிதர்கள் உயிர் இழக்கின்றனர் என்று கூறி, மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. அப்போது சிராவயலைச் சேர்ந்த கிராமமக்கள் மஞ்சுவிரட்டு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு தடை கூடாது என்று ஆங்கிலேயர்களிடம் முறையிட்டனர். அதற்கு ஆங்கிலேய அரசு ஒரு நிபந்தனை விதித்தது. அதன்படி, காளைகளுக்கு கொம்பு இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்துங்கள் என்று கூறினர். அந்த நிபந்தனைக்கு கிராமமக்களும் ஒப்புக்கொண்டனர். பின்னர் மஞ்சுவிரட்டு நாளில் கொம்புகள் தீட்டப்பட்ட காளைகளுடன் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதனை பார்த்த ஆங்கிலேயர்கள், “கொம்பு இல்லாத மஞ்சுவிரட்டு நடத்தச்சொன்னால் அனைத்து காளைகளுக்கும் கொம்பு உள்ளதே“ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கிராமமக்கள், “தாரை, தப்பட்டை மற்றும் கொம்பு வாத்தியத்துடன் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். நீங்கள் கேட்டுக்கொண்டதால், கொம்பு வாத்தியம் இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்துகிறோம்“ என்று சாமர்த்தியமாக பதில் கூறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சிராவயலை சேர்ந்த கிராம பெரியவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்