ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் த.மா.கா. கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பரமக்குடி,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சோ.பா.ரெங்கநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக வறட்சி நிலை உருவாகி உள்ளது. கடன் வாங்கியும், வங்கிகளில் நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்த விவசாயிகள் மீளாத்துயரத்தில் உள்ளனர்.
மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர் நெல் பயிரிட்டதில் 10 சதவீதம் தான் விளைந்துஉள்ளது. அதையும் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை பாய்ச்சி விளையச்செய்துள்ளனர். ஏராளமான கிராமங்களில் நெற்பயிர்கள் அனைத்தும் சாவியாகி விட்டன. கால்நடைகளுக்கு கூட அவற்றை பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
எனவே இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரும், கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும். போதிய கால அவகாசம் இல்லாததால் பல விவசாயிகள் இன்னும் பயிர் காப்பீடு பதிவு செய்யாமல் உள்ளனர். விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசு இதில் முழுக்கவனம் செலுத்தி விவசாயிகளை காப்பாற்ற உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.