இனி இருமல் இல்லை

குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

Update: 2018-01-07 10:00 GMT
மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன் படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து பார்ப்போம்.

சளி தொந்தரவுக்கு தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை போக்கும். வலியையும் கட்டுப்படுத்தும். சளி பிரச்சினையில் இருந்தும் காக்கும்.

சளி, இருமலுக்கான ஆரம்ப அறிகுறி தென்பட்டுவிட்டால் சுடுநீரை குடிப்பதற்கு வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து பருகலாம்.

மார்பு சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள் தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சூடாக்கி மார்பில் தடவி வரலாம். ஏலக்காய், சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வரலாம். அது மார்பு சளியை போக்க உதவும்.

குளிர்காலத்தில் லவங்கபட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சியையும் சேர்த்து கொள்வதன் மூலம் சளி தொந்தரவில் இருந்து விடுபடலாம்.

காலை வேளையில் சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி சேர்த்து, அதனுடன் தேன் கலந்து பருகி வரலாம். அது தொண்டைக்கு இதமாக இருக்கும்.

ஏலக்காயை பொடித்து சுடுநீரில் கலந்து டீயாக தயாரித்து பரிமாறலாம். அது குளிர்கால நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும். சோர்வான மனநிலையில் இருந்தும் மீளவைக்கும்.

இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகிவருவதன் மூலம் மார்பு சளிக்கு தீர்வு காணலாம்.

சாம்பார் வெங்காய சாறுடன், இஞ்சி சாறு, தேன் கலந்து பருகி வருவதும் சளி தொந்தரவை போக்கும்.

ஜாதிக்காய்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் உண்டு. சூடான பாலில் சிறிதளவு தேன் சேர்த்து அதனுடன் ஜாதிக் காயையும், ஏலக்காயையும் பொடித்து போட்டு பருகலாம். இது குளிர்கால நோய்களை தடுக்கும்.

குளிர் காலத்தில் மஞ்சள் தூளை பாலில் கலந்து பருகி வருவது பல நோய் தொற்றுகளில் இருந்து உடல் நலனை பாதுகாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.

பூண்டுவை சூப்பாகவோ, குழம்பில் சேர்த்தோ சாப்பிட்டு வரலாம். அது சளி, இருமலை எளிதாக கட்டுப்படுத்திவிடும்.

மேலும் செய்திகள்