காற்றுக்கான கண்டுபிடிப்பு

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு வசிப்பவர்கள் சுவாச கோளாறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

Update: 2018-01-07 07:30 GMT
வெளியிடங்களுக்கு செல்லும்போது முகத்தை துணியால் மூடிக்கொண்டு பயணிக்கும் சூழல் நிலவுகிறது. காற்று மாசுபாடு பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு தரப்பில் இருந்தும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாக காற்றில் கலந்திருக்கும் மாசுவை வடிகட்டும் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முகத்தை துணியால் மறைப்பதற்கு பதிலாக மூக்கில் பொருத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மெல்லிய சவ்வு போல் அமைந்திருக்கும் இதில் நுண் துளைகள் அமைந்திருக்கின்றன.

அந்த சாதனம் காற்றை வடிகட்டி அனுப்புவதோடு எளிதாக சுவாசிப்பதற்கும் வழி செய்கிறது. இதை மூக்கில் பொருத் தினாலும் முக அழகுக்கு பங்கம் விளைவிக்காத வகையில் அமைந்திருப்பது சிறப்பம்சம். மூக்கின் வடிவத்திற்கு ஏற்ப இதனை வடிவமைத்து தருகிறார்கள். அதனால் இந்த சாதனம் பொருத்தப்பட்டிருப்பது பளிச்சென்று வெளியே தெரியாது. இந்த காற்று வடிகட்டி சாதனம் ஒன்றை 8 மணி நேரம் பயன்படுத்தலாம். அனைத்து தரப்பினரும் வாங்குவதற்கு ஏற்ற வகையில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இணையதளம் வழியாக பரவலாக விற்பனை செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனை டெல்லி ஐ.ஐ.டி.யும், நானோகிளீன் குளோபல் நிறுவனமும் இணைந்து வடிவமைத்து இருக்கிறது. இந்த வடிகட்டி சாதனத்திற்கு தேசிய அளவிலான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இது உலகின் 50 புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதற்கு தென் கொரிய அரசும் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.

மேலும் செய்திகள்