செல்போனில் 3 முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்குப்பதிவு

3 முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2018-01-06 22:30 GMT
மும்பை,

3 முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முத்தலாக் மசோதா

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்ததோடு, இதுபற்றி சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, முத்தலாக் தடைக்கு சட்டம் இயற்றும் பொருட்டு, ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இந்த மசோதா டெல்லி மேல்-சபையில் நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவில் விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த தருணத்தில் மும்பையில் பணிபுரிந்து வரும் ஒருவர், சொந்த ஊரில் உள்ள தனது மனைவியிடம் செல்போன் மூலம் தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்போனில் தலாக்...


உத்தர பிரதேச மாநிலம் சதாவுவா கிராமத்தை பூர்வீகமாக கொண்ட அவரது பெயர் முபாரக் அலி. இவரது மனைவி சகினா பானு. இந்த தம்பதிக்கு 14 வயதில் கரிஷ்மா என்ற மகள் இருக்கிறார். கரிஷ்மா மாற்றுத்திறனாளி.

மகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்புமாறு மும்பையில் பணிபுரியும் கணவர் முபாரக் அலியிடம், சகினா பானு கூறினார். இதனால், எரிச்சல் அடைந்த முபாரக் அலி, செல்போனிலேயே 3 முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தார்.

இதனால், பதறிப்போன சகினா பானு, இதுபற்றி உள்ளூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்