கோலாப்பூர் அருகே நிலத்தகராறில் ஒருவர் சுட்டுக்கொலை பெண் உயிருக்கு போராட்டம்
கோலாப்பூர் அருகே நிலத்தகராறு காரணமாக ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோலாப்பூர்,
கோலாப்பூர் அருகே நிலத்தகராறு காரணமாக ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தந்தை– மகன் கைது செய்யப்பட்டனர்.
நிலத்தகராறுகோலாப்பூர் மாவட்டம் பனாலா தாலுகா சிக்கால்கர்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவ் மகாதேவ் (வயது 50). இவரது மனைவி சசிகலா. சதாசிவ் மகாதேவுக்கும், அவரது சகோதரர் இந்துராவ் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சதாசிவ் மகாதேவின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் வந்த இந்துராவ், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், வெளியே நின்று சத்தம் போட்டார். இந்துராவுடன் அவரது மகன் சசிகாந்தும் வந்திருந்தார்.
துப்பாக்கியால் சுட்டார்அப்போது, சசிகாந்த் கதவை உடைத்தார். இதைத்தொடர்ந்து, இந்துராவ் துப்பாக்கியால் வீட்டை நோக்கி சுட்டார். இதில், சதாசிவ் மகாதேவின் உடலை துப்பாக்கி குண்டு துளைத்தது. இதனால், நிலைகுலைந்த அவர், சரிந்து விழுந்தார்.
எனினும், ஆத்திரம் தீராத இந்துராவ், துப்பாக்கியால் சசிகலாவையும் சுட்டார். இதில், அவருக்கும் குண்டு காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைத்தொடர்ந்து, இந்துராவும், அவரது மகன் சசிகாந்தும் அங்கிருந்து தப்பியோடினர்.
சாவுதுப்பாக்கி குண்டு பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த சதாசிவ் மகாதேவையும், அவரது மனைவி சசிகலாவையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். எனினும், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சதாசிவ் மகாதேவ் பரிதாபமாக இறந்துபோனார்.
சசிகலா உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்துராவையும், சசிகாந்தையும் கைது செய்தனர். நிலத்தகராறில் சகோதரரையே சுட்டுக்கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.