கும்மிடிப்பூண்டி அருகே மணல் கடத்தல்; 5 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே மணல் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கும்மிடிப்பூண்டி,
ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக தொடர்ந்து லாரிகளில் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு மணல் கடத்தப்படுவதாக புகார் வந்தது. நேற்று அதிகாலை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூருக்கு நேரடியாக வந்து மணல் கடத்தல் தொடர்பாக அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
ஏழுகிணறு பாலம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
சோதனையில் ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 7 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். இதில் 2 லாரி டிரைவர்கள் தங்களது வாகனத்தை சாலையில் விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
5 பேர் கைது
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களான ஊத்துக்கோட்டை அடுத்த பெத்தநாயக்கன் பேட்டை கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 27), வேலூர் அடுத்த சலவன்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெருமாள் (48), கும்புளியை சேர்ந்த ராஜேஷ் (32), ஆந்திர மாநிலம் காரூரை சேர்ந்த அருள்(25) மற்றும் வரதையாபாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (22) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய 2 லாரி டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.